"அனுமதியில்லாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பக்கூடாது'
By DIN | Published On : 03rd July 2019 08:50 AM | Last Updated : 03rd July 2019 08:50 AM | அ+அ அ- |

காவல்துறை அனுமதியில்லாமல் எந்த வெளிநாட்டு வேலைக்கும் ஆள்களை அனுப்பக்கூடாது என்றார் மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்து அனுப்பும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
இளைஞர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் அதற்கான வழிமுறைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், அரசு அனுமதியில்லாத துணை முகவர்களிடம் அதிக பணத்தைச் செலுத்தி, ஏமாந்து போவது தொடர்பான புகார்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.
நல்ல வேலை, நல்ல ஊதியம் எனக் கூறி இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு துணை முகவர்களாக உள்ளவர்கள், பல பொய்யான தகவல்களைக் கூறி குறிப்பிட்ட இடத்துக்கு வேலைக்கு அனுப்பாமல், குறைந்த ஊதியத்தில் சம்பந்தமே இல்லாத வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். இந்த விவகாரத்தில் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட முகவர்களோ அல்லது துணை முகவர்களோ யாராக இருந்தாலும் காவல்துறை அனுமதியில்லாமல் யாரையும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பக் கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமலும், உரிய நேரத்தில் பதிவு புதுப்பிக்காமலும் இருக்கும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் சட்ட விதிகளை மீறினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களைச் சுற்றுலா விசாவில் கண்டிப்பாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பக் கூடாது.சுற்றுலா விசாவில் நல்ல வேலை என அனுப்பி வைக்கப்படும் இளைஞர்கள் அங்கு தோட்ட வேலை, உணவக வேலைக்குச் செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு, அதை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதால் பலரும் பல இன்னல்களை சந்திப்பதும் தொடர்கிறது என்றார்.
கூட்டத்துக்கு உதவி ஆணையர்கள் கண்டோன்மென்ட் ப. மணிகண்டன், பொன்மலை பாலமுருகன், கோட்டை செ. சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுகுமாறன் வரவேற்றார். நிறைவில் ஆய்வாளர் மு.பெரியசாமி நன்றி கூறினார்.