அடக்கஸ்தலம் கோரி ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலத்துக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட
Updated on
2 min read

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அடக்கஸ்தலத்துக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேட்டவாய்த்தலையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை  மனு அளித்தனர்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
பேட்டைவாய்த்தலையில் வசித்து வரும்  இஸ்லாமிய சமூகத்தினருக்காக, கடந்த 1978ஆம் ஆண்டு வனத்துறையால் 0.15 ஹெக்டேர் நிலம் காவிரிக் கரையில், இறந்தவர்களை அடக்கம் செய்ய வழங்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இந்த பகுதி அவ்வப்போது பாதிக்கப்பட்டு பெரும்பாலான அடக்கஸ்தலப் பகுதிகள் அழிந்துவிட்டன. பின்னர், சிறுகமணி பேரூராட்சி நிர்வாகத்திடம் ரூ.5 லட்சம் பெற்றும், இஸ்லாமியர்களிடம் நிதி திரட்டியும் காவிரிக்கரையில் தடுப்புச் சுவர் அமைத்து, அடக்கஸ்தலம் இடம் மீட்டெடுக்கப்பட்டது. 
பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த அனுமதி 1998-க்கு பிறகு புதுப்பித்து வழங்கப்படவில்லை.  வனத்துறையினர் இடத்தை பார்வையிட்டு அனுமதி வழங்கக் கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் வல் ஜமாத் சார்பில் சொந்தமாக இடம் கிரயம் செய்து அடக்கஸ்தலுத்துக்கு பயன்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதாகப் புகார் கூறி காவல்துறையினர் தடை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பேட்டவாய்த்தலை பகுதி இஸ்லாமியர்களுக்கு அடக்கஸ்தலம் அமைக்க உரிய அனுமதி வழங்க வேண்டும்.
அப்பணநல்லூர், கொளக்குடி மக்கள் அளித்த மனு:    அப்பணநல்லூர், கொளக்குடி கிராம மக்களுக்கான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் பதித்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே, குழாய்களை மாற்றி கூடுதல் கொள்ளவுடன் கூடிய கலாய் வகை குழாய் பதிக்க வேண்டும். இந்த இணைப்பை பழைய வாரச் சந்தை வரை நீட்டிக்க வேண்டும். மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்படும் மோட்டார் இயக்குதல் மற்றும் குடிநீர் விநியோக பணியை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மானிய விலையில் மீட்டர் இயந்திரங்கள்: நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா முகமது அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:  எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஆட்டோக்களுக்கு ஆரம்பக் கட்டணமாக 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.30 எனவும், பின்னர் வரும் ஒவ்வொரு கி.மீ. தொலைவுக்கு தலா ரூ.15 என கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோக்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜிபிஆர்எஸ் கருவியுடன் கூடிய மீட்டர் இயந்திரங்களை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.
போலீஸார் மீது புகார்: முசிறி வட்டம், குருவிக்காரன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாயுமான் (65). இவர், தனக்கு சொந்தமாக புலிவலம் கிராமத்தில் உள்ள நிலத்தை அளக்க உரிய கட்டணம் செலுத்தி முசிறி வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், உள்ளூர் நபர்களால் புலிவலம் போலீஸார் தடையாக இருந்து தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகக் கூறி, தனக்கு  உரிய பாதுகாப்பு கோரியும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆட்சியரகத்தில் தாயுமான் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். போலீஸார் அவரை சமரசம் செய்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கச் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com