முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
By DIN | Published On : 14th June 2019 09:45 AM | Last Updated : 14th June 2019 09:46 AM | அ+அ அ- |

திருச்சியில் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விலகி, தமிழக முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக திருச்சி புறநகர் மாவட்டச் செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்கு வியாழக்கிழமை மாலை வந்த முதல்வர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, திருச்சி மாநகர் மாவட்டச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமார் ஏற்பாட்டின்பேரில் மாற்றுக் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அமமுக மாவட்ட மீனவரணி செயலர் பி. எம். சுலைமான் மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள், தீபா பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும், தாய்க் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்வின்போது அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர். சிவபதி, மு. பரஞ்சோதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
கோரிக்கை மனு அளித்த பல்வேறு தரப்பினர்
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பல்வேறு தரப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சுற்றுலா மாளிகையில் முதல்வர் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டபோது விவசாயிகள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதல்வர் கே. பழனிசாமி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
வீரமுத்தரையர் சங்கம்: வீர முத்தரையர் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் கே.கே. செல்வகுமார் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அளித்த மனுவில், கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த முத்தரையர் மன்னர்களின் வரலாறுகளை தமிழக அரசு பள்ளிகளில் பாடமாக்க வேண்டும், முத்தரையர் மன்னருக்கு திருச்சியில் உள்ளது போல தஞ்சை, சென்னை உள்ளிட்ட இடங்களில் வெண்கலச் சிலை அமைக்க வேண்டும், பொன்னமராவதி கலவரத்தின்போது, முத்தரையர் இனத்தைச் சேர்ந்த 1000 பேர் மீது பதிவு செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர்.
த.மா.கா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராசன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில், காவிரிப் பிரச்னைக்கு தீர்வு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தார்.