திருச்சி விமான நிலையத்தில் ரூ. 15.32 லட்சம் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 14th June 2019 10:09 AM | Last Updated : 14th June 2019 10:09 AM | அ+அ அ- |

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட ரூ. 15.32 லட்சம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரஹமத்அலிகான் (43) நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முகமது ரஹமத்அலிகான் தனது ஆசன வாயில் 610 கிராம் எடையுள்ள பசையில் தங்கத்தை மறைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட வாழைப்பழ சிகிச்சைக்கு பிறகு 4 பசைத் துண்டுகள் மீட்கப்பட்டன. பின்னர் அவற்றிலிருந்த தங்கத்தை பிரித்தெடுத்தபோது அதில் ரூ.15.32 லட்சம் மதிப்புள்ள 468 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.