மர்ம விலங்கு தாக்கி 7ஆடுகள் பலி
By DIN | Published On : 14th June 2019 09:44 AM | Last Updated : 14th June 2019 09:44 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மர்ம வன விலங்கு தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 6 ஆடுகள் உயிருக்குப் போராடுகின்றன.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி வனச்சரகத்துக்குட்பட்ட பெரியமலை தொடர்ச்சியாக புத்தாநத்தம் காப்புக் காடுகளுக்கு நடுவேயுள்ள கணவாய்பட்டியில் வசிப்பவர் விவசாயி பெருமாள். இவரது குடும்பத்தினர் கால்நடை விவசாயம் செய்கின்றனர். தற்போது பெருமாள் 50 செம்மறியாடுகளை தனது பட்டியில் வளர்த்து வருகிறார். புதன்கிழமை நள்ளிரவு பட்டியில் புகுந்த மர்ம வனவிலங்கு ஆடுகளைக் கடித்து குதறியுள்ளது. இதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 6 ஆடுகள் உயிருக்குப் போராடுகின்றன. தகவலறிந்து சென்ற கால்நடை மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வும் செய்தனர். வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். தாக்கியது ஓநாய் அல்லது செந்நாய்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.