வகுப்புகளைப் புறக்கணித்து மாணவிகள் போராட்டம்
By DIN | Published On : 14th June 2019 10:10 AM | Last Updated : 14th June 2019 10:10 AM | அ+அ அ- |

திருச்சி அருகே தலைமை ஆசிரியையைக் கண்டித்து மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே காட்டூரில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவிகள் தொடர்ந்து இதே பள்ளியில் படிக்க வேண்டும் என தலைமை ஆசிரியை சுமதி வலியுறுத்தினாராம்.
இதனடிப்படையில் அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவிகள் 25 பேர் ஆங்கில வழிக்கல்வியில் பயில 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு புதிய சீருடை, நூல்களை வழங்கியுள்ளது. இதற்கிடையில் ஆங்கில வழிக் கல்வியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவிகளை தமிழ்வழிக் கல்வியில் பயிலுமாறு தலைமை ஆசிரியை சுமதி தெரிவித்தராம்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி பயில சேர்ந்த மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரியர்கள் ஆங்கில வழிக்கல்வி பயில தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.