அதிமுக மாவட்டச் செயலர் இல்லத் திருமண வரவேற்பு; முதல்வர் பங்கேற்றார்

திருச்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் டி. ரத்தினவேல் இல்ல திருமண வரவேற்பு

திருச்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் டி. ரத்தினவேல் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அதிமுக, திருச்சி புறநகர் மாவட்டச் செயலராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளவர் டி. ரத்தினவேல். இவரது மகன் ஆர். சுரேஷ்குமார்-ஜி. மகாலட்சுமி ஆகியோரின் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவையொட்டி, முன்னதாக திருமண வரவேற்பு மற்றும் மணமகன் அழைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை திருச்சிக்கு வந்தார்.  மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்வர், அங்கு சிறிது நேரம் அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 6 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். சிறிது நேரம் மண்டபத்திலிருந்த அவர் பின்னர் புறப்பட்டுச் சென்றார். நாமக்கல், சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு கோவையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் சென்னை செல்கிறார்.
திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள்  ஆர். காமராஜ் (உணவுத் துறை), சி. விஜயபாஸ்கர் (சுகாதாரத் துறை), வெல்லமண்டி என். நடராஜன் (சுற்றுலாத் துறை), எஸ். வளர்மதி (பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மைப் பிரிவு),  எம். ஆர். விஜயபாஸ்கர் (போக்குவரத்துத் துறை), செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர். சிவபதி, மு. பரஞ்சோதி,  திருச்சி மாநகர் மாவட்டச் செயலரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமார், முன்னாள் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
துணை முதல்வர் பங்கேற்பு : தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்றார்.  மணமக்களை வாழ்த்திய அவர் சிறிது நேரம் கழித்து புறப்பட்டுச் சென்றார். 
முதல்வரின் வருகையை ஒட்டி திருச்சி மாநகர காவல்துறை சார்பில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com