மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகை திருமண உதவிகள்
By DIN | Published On : 14th June 2019 10:08 AM | Last Updated : 14th June 2019 10:08 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெறலாம்.
இதுகுறித்து ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண உதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்தல் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் செய்யும் திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோரை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்தல், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்தல் என 4 நிலைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியரில் யாரேனும் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதிக்கு முதல் திருமணமாக இருத்தல் அவசியம். திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருமண அழைப்பிதழ், மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல்கள், முதல் திருமணம் என்பதற்கான விஏஓ சான்று ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், கன்டோன்மென்ட் என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.