மார்ச் 10 -இல் முகாம்: 2.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 06th March 2019 09:43 AM | Last Updated : 06th March 2019 09:43 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் முகாமில் 2.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் வரும் 10ஆம் தேதி தீவிர போலியோ சொட்டு புகட்டும் முகாம் நடைபெறுகிறது. இதற்காக கிராமப்புறங்களில் 1,279 மையங்கள், திருச்சி மாநகராட்சியில் 290, துறையூர் நகராட்சியில் 20, மணப்பாறை நகராட்சியில் 23 என மொத்தம் 1,569 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி நகர்நல மையங்கள் அனைத்திலும் சொட்டு மருந்து புகட்டப்படும். மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 390 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், ரயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு சுற்றுலாத் தலம் உள்ளிட்ட 55 இடங்களிலும் சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை அழைத்து வர இயலாத மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், தங்களது 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து புகட்டிக் கொள்ள வேண்டும்.