தூய்மை நகரங்கள் பட்டியல்  திருச்சிக்கு 39 ஆவது இடம்

தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், அகில இந்திய அளவில் 39 ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது.


தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், அகில இந்திய அளவில் 39 ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆண்டு தோறும் தூய்மை நகரங்களைத் தேர்வு செய்து, அதற்கான தரவரிசைப்  பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மூன்றாமிடம்பெற்ற திருச்சி மாநகராட்சி, முதலிடத்தை பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வந்தது. மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் இதற்காக பல்வேறு பணிகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொண்டார். இதன் பயனாக 2017 ஆம் ஆண்டில் 6 ஆவது இடம் பெற்றது.
தொடர்ந்து  2018-ஆம் ஆண்டில் 13 ஆம் இடத்தையும் பெற்ற திருச்சி மாநகராட்சி,  நிகழாண்டில் 39 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 
மேலும், தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இதற்கானஅறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது.
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்டஇடங்களில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து நுண் உரமாக்குதல் போன்ற பணிகள்,  உடற்பயிற்சி சாதனங்கள், நடைப்பயிற்சி வசதிகள் போன்றவற்றுடன் பூங்காக்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் கூறியது:
தூய்மை நகரங்கள் தரவரிசைப் பட்டியலில், திருச்சி மாநகராட்சி அகில இந்திய அளவில், 5000 மதிப்பெண்களுக்கு 3,414 பெற்று 39 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 
கட்டட இடிபாடுகள், கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அளிக்கப்பட்ட 1000 மதிப்பெண்ணில் 450 தான் பெற முடிந்தது. கட்டட இடிபாடுகளை மறுசுழற்சி செய்வதற்கான திட்டம் தமிழகத்தில் இல்லாததால் மதிப்பெண் குறைந்துவிட்டது.   ஆனாலும், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளோம். தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்றி முதலிடத்தை பெறும் முயற்சியைத் தொடருவோம் என்றார்.
மாநகராட்சி தூய்மை இயக்கத் தூதுவரும் மூளை நரம்பியல் மருத்துவருமான  எம்.ஏ. அலீம் கூறுகையில், கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு போட்டியில் 4,237 நகரங்கள் பங்கேற்றுள்ளன. 
இந்த எண்ணிக்கை அதிகமாகும். எனவேதான், நாம் 39 ஆவது இடம் பிடித்துள்ளோம். என்றாலும் மாநகரைத் தூய்மையாக்கும் பணிகளை திறம்பட மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர், பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக திட்டங்களை நிறைவேற்றி பட்டியலில் குறிப்பிட்ட இடத்தைப் பெற முயற்சிப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com