பெரம்பலூரில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை
By DIN | Published On : 22nd March 2019 08:34 AM | Last Updated : 22nd March 2019 08:34 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்து தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அக் கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வியாழக்கிழமை வந்தார். திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த மு.க. ஸ்டாலினை, டி.ஆர். பச்சமுத்து வியாழக்கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெரம்பலூர் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் என்ற அடிப்படையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ள திமுக தலைவரை சந்தித்தேன். தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். பெரம்பலூர் தொகுதி எனக்கு நன்கு அறிமுகமான தொகுதி. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 2 லட்சத்தும் அதிகமான வாக்குகள் பெற்றேன். இப்போது, மக்களுக்கு நன்கு அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு பிறகு, பெரம்பலூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்தவித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. நான் வெற்றி பெற்றால் பெரம்பலூர் தொகுதிக்கு தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தருவேன் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...