காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு
By DIN | Published On : 28th March 2019 07:52 AM | Last Updated : 28th March 2019 07:52 AM | அ+அ அ- |

மணப்பாறையில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரதானக் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டது.
குளித்தலை மணத்தட்டையிலிருந்து காவிரியாற்றுப் படுகையில் எடுக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீர், குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மணப்பாறை அருகிலுள்ள கலிங்கப்பட்டியில்
பிரதான இரும்புக் குடிநீர்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து 15 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது.
தகவலறிந்து வந்த குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் ஏற்றத்தை நிறுத்திய நிலையிலும், குழாயில் சென்ற குடிநீர் சுமார் 2 மணி நேரம் பீறிட்டு அடித்தது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலுள்ள குழாய்கள் பல இடங்களில் துருப்பிடித்துக் காணப்படுகின்றன. கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு, பழுதான குழாய்களை சரி செய்து, தண்ணீரை வீணாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...