திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், ஸ்ரீரங்கத்திலிருந்து புதன்கிழமை மாலை பிரசாரத்தை தொடங்கினார்.
அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மருத்துவர் வி. இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கூட்டணிகட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ரங்கா-ரங்கா கோபுரம் முன்பு புதன்கிழமை மாலை தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவன் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, த.மா.கா. மாவட்டத் தலைவர்கள் நந்தா கே.செந்தில்வேல், திருச்சி குணா, பா.ஜ.க.மாவட்டத் தலைவர் தங்க.ராஜய்யன், புதிய தமிழகம், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று வாக்குகளைச் சேகரித்தனர்.
நான்கு சித்திரை, உத்திர வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், மூலத்தோப்பு, செட்டித்தோப்பு, மேலூர், தெப்பக்குளம், சங்கர்நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம், ராயர் தோப்பு, பெரியார் நகர், சந்திரா நகர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார்.
திருச்சிக்கு ஜவுளித் தொழில் பூங்கா கொண்டுவருவதாகவும், திருச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனை உருவாக்குவதுடன், முதன்மை மாநகராக மாற்றுவதாகவும் வேட்பாளர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.