சிறந்த படைப்பாளிகள் இறவாப் புகழ் பெறுகிறார்கள்
By DIN | Published On : 30th March 2019 08:22 AM | Last Updated : 30th March 2019 08:22 AM | அ+அ அ- |

சிறந்த படைப்பாளிகள் இறவாப் புகழ் பெறுகிறார்கள் என திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த எழுத்தாளர் தமிழவேள் ஆதி.குமணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசினார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராசேந்திரன்.
பொங்கு தமிழ் இளையோர் இயக்கம், சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம், இனிய நந்தவனம் மற்றும் நம்ம திருச்சி இதழ்கள் ஆகியன இணைந்து மலேசிய தமிழ் எழுத்தாளர் தமிழவேள் ஆதி.குமணன் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள சுசி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராஜேந்திரன் பேசியது: எழுத்தாளர்கள் தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் எழுத்துக்களுக்காக சமரசம் செய்து கொள்ளக்கூடாது. சமரசம் செய்து கொள்ளக்கூடாத சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கியவர் மலேசிய தமிழ் எழுத்தாளர் தமிழவேள்ஆதி.குமணன். இவர் எழுதிய கவலையிலிருந்து மீள்வது எப்படி என்ற கட்டுரை மலேசியா முழுவதும் பிரபலமடைந்தது.
சிறந்த படைப்பாளிகளுக்கு இரு மரணங்கள் ஏற்படும். ஒன்று இயற்கையாக ஏற்படும் மரணம். மற்றொன்று அவரது படைப்புகளை மக்கள் பேசிக் கொண்டே இருந்துவிட்டு அவரைப் பற்றி யாருமே பேசாமல் இருக்கும் போது மற்றொரு மரணம் ஏற்படுகிறது. இதுபோன்று சிறந்த படைப்பாளிகள் இறவாப் புகழ் பெற்றவர்களாகவே இருப்பார்கள் என்று பேசினார்.
நிகழ்விற்கு தமிழர் அறிவியக்க பேரவையை சேர்ந்த குறள்மொழி தலைமை வகித்தார்.பரத் முன்னிலை வகித்தார்.நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றார்.கும்பகோணம் தமிழாய்வு அறக்கட்டளையின் நிறுவனர் உ.பிரபாகரன்,தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலக தமிழ்க் கல்வித்துறை தலைவர் ரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோரும் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தை சேர்ந்த தி.நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...