அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கியதையடுத்து, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அவதிக்குள்ளாயினர். மேலும் வெயிலின் அளவு 107 டிகிரி பதிவானது.
திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல் 20 முதல் 26 ஆம் தேதி வரை 104 டிகிரி பதிவானது. ஆனால், இதுவரையான நாட்களில் உச்சபட்சமாக இருந்து வந்தது. கத்தரி வெயில் தொடங்க 3 நாட்கள் இருந்த நிலையில் மே 2 ஆம் தேதி 105 டிகிரியும், மே 3 ஆம் தேதி 107 டிகிரியாகவும் பதிவானது.
இந்நிலையில் கத்தரி வெயில் தொடங்கும் மே 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் வரை 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர நாள்களாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி சனிக்கிழமை காலை முதலே கத்தரி வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட 107 டிகிரியாக பதிவானது. இதன் காரணமாக மதிய நேரத்திற்கு மேல் வெப்ப காற்று வீச தொடங்கியது. சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தங்களது முகங்களை துணிகளால் மூடிக் கொண்டு சென்றனர். சிலர் குடைபிடித்தப்படி செல்வதையும் காணமுடிந்தது.
கத்தரி வெயில் காலங்களில் திருச்சியை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு பதிவான 106 டிகிரி வெயிலின் தாக்கமே உச்சபட்சமாக இருந்து வந்தது. இந்த ஆண்டில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 107 டிகிரி பதிவானதால் மீதமுள்ள நாட்களில் வெயிலின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.