எறும்பீசுவரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 15th May 2019 08:26 AM | Last Updated : 15th May 2019 08:26 AM | அ+அ அ- |

திருவெறும்பூர் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரர் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவில், திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எறும்புகளுக்கும் அருள்தந்த ஈசுவரன் எழுந்தருளிய இடம் என்பதால், இங்குள்ளஇறைவன் எறும்பீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலின் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா மே 7 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் ஈசுவரனுக்கும், உமையாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று, மஞ்சள் இடித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், பொதுமக்கள் மற்றும் சிவபக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்து , மொய்எழுதினர்.
வைகாசி விசாகத் தேரோட்டம் மே 17 ஆம் தேதியும், தெப்ப உற்ஸவம் 20 ஆம் தேதியும் நடைபெறஉள்ளது. கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் விழாக்குழுவினர் திருவிழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.