நிலவணிக இடைத்தரகர் சடலமாக மீட்பு
By DIN | Published On : 15th May 2019 08:26 AM | Last Updated : 15th May 2019 08:26 AM | அ+அ அ- |

முசிறியில் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த நிலவணிக இடைத்தரகரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ரோஜாரியோ கிருஸ்டின் (56). இவர் வீட்டை விட்டு பிரிந்து, கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் தங்கி, நிலவணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக முசிறி-துறையூர் சாலையில் பூங்கா அருகிலுள்ள வணிக வளாகத்தின் மேல்தளத்தில் வாடகை வீடு எடுத்து, நில வணிக இடைத்தரகர் பணியை ரோஜாரியோ செய்து வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து பக்கத்து அறையில் வசித்து வருபவர்கள், கட்டட உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கட்டட மேலாளர் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அப்பகுதிக்குச் சென்று கதவை உடைத்து பார்த்த போது ரோஜாரியோ சடலமாகக் கிடந்தார். இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
முசிறி போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.