முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர்கள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 15th May 2019 08:25 AM | Last Updated : 15th May 2019 08:25 AM | அ+அ அ- |

முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசு மீண்டும் கையகப்படுத்த முயற்சிப்பதைக் கண்டித்து, திருச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை மனு அளித்த முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்கள் தொடர்ந்து கூறியது: இரண்டாம் உலகப் போர் முடிந்து, 1947-க்குப் பின்னர், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு வீர மானியமாக, அப்போதையை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்த நெய்தலூர் காலனிப் பகுதியில், சுமார் 355 ஏக்கர் நிலம் 82 முன்னாள் ராணுவவீரர்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. இதற்காக சங்கப் பெயரில் பெறப்பட்ட கூட்டுப் பட்டாவுக்கு பதிலாக தனிநபர் பட்டா பெற முயற்சிகள் மேற்கொண்டு இருக்கும் நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலர் அண்மையில் திடீரென அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர்நிலையாக உள்ள பகுதிகளை கையகப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை (முன்பு நீர் நிலையாக இருந்த இடம்) மீண்டும் கையகப்படுத்த போவதாக அறிவித்ததை தொடர்ந்து, அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, இந்த முடிவை கைவிட வேண்டும். கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் நீதிமன்றத்தையும் நாட உள்ளோம் என்றனர் அவர்கள்.
முன்னதாக, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.