இனிப்பக உரிமையாளர் மனைவியிடம் நகைபறிப்பு
By DIN | Published On : 19th May 2019 08:39 AM | Last Updated : 19th May 2019 08:39 AM | அ+அ அ- |

மணப்பாறையில் இனிப்பக உரிமையாளர் மனைவியிடம், 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி சாலையில் இனிப்பகம் நடத்தி வருகிறார். கணவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி சிவசங்கரி, தனது மகளை அழைத்துக் கொண்டு இனிப்பகத்துக்கு சனிக்கிழமை வந்தார்.
உணவைக் கொடுத்த பின்னர் வீட்டுக்கு சிவசங்கரி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சிவசங்கரி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில் சிவசங்கரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கார்த்திகேயன், மணப்பாறை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நகைபறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.