மாநகராட்சிக்குச் சொந்தமான 3,889 சதுரமீட்டர் இடம் மீட்பு
By DIN | Published On : 19th May 2019 08:41 AM | Last Updated : 19th May 2019 08:41 AM | அ+அ அ- |

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்துக்காக தனியார் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான 3,889 சதுர மீட்டர் இடம் சனிக்கிழமை அதிரடியாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது:
திருச்சி மேலரண் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 சதுர மீட்டர் பரப்புள்ள இடம், நகராட்சி காலத்திலேயே சிட்டி கிளப் என்ற பொழுதுபோக்கு மன்றத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
கடந்த 2012-13 - ஆம் ஆண்டில் இந்த இடத்துக்கு வாடகையாக ரூ.1,613 மட்டுமே பெற்று வந்த நிலையில், மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த இடம் தேவைப்படுவதால், குத்தகையை ரத்து செய்து இடத்தை காலி செய்துதர நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும், 25 ஆண்டுகளுக்கு நீடித்து வழங்கப்பட்ட குத்தகை உரிமம் 2014-இல் காலாவதியாகவிட்டது. புதிய குத்தகை உரிமம் கோரி சிட்டி கிளப் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை.
எனவே, மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்திலுள்ள மனமகிழ் மன்றம் அனுமதியின்றி குடியிருப்பதான இனத்துக்கு மாற்றப்பட்டது. இதுமட்டுமின்றி மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், இந்த இடத்தில் பன்னடுக்கு வாகனம் நிறுத்துமிடம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
எனவே, கட்டடத்தை காலி செய்து, இடத்தை ஒப்படைக்குமாறு சிட்டி கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும், இடத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, குத்தகை இருப்பவரை அனுமதியின்றி குடியிருப்பவராகக் கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்படி, இடத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சிப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் குணசேகரன், பிரபாகரன் ஆகியோரது தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஜேசிபி மூலம் கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டு நிலத்தைக் கையகப்படுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் 2 மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.