போக்குவரத்தை ஒழுங்குப்படுத்ததில்லைநகர் 80 அடி சாலையில் ரூ.48.75 லட்சத்தில் மையத்தடுப்பு
By DIN | Published On : 26th May 2019 02:47 AM | Last Updated : 26th May 2019 02:47 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும்வகையில், சாலைகளில் மையத் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் கோட்டப் பகுதிகளில், மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை ஒழுங்குப்படுத்த மாநகராட்சியின் பொது
நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதற்கட்டமாக மாநகராட்சிக்குள்பட்ட 65 வார்டுகளிலும் போக்குவரத்து வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வரும் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கவும் மைய தடுப்புச்சுவர் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, கோ. அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட 50ஆவது வார்டில் தில்லைநகர் 80 அடி சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.48.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியானது 80 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும், தடுப்புச் சுவரின் நடுவே மலர்ச்செடிகள் வளர்க்கவும், வண்ண விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள்ளோ, அடுத்த மாதம் முதல் வாரத்திலோ பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது:
பொலிவுறு நகரத் திட்டத்தில் திருச்சி மாநகராட்சி இடம் பெற்றுள்ளதை அடுத்து, மாநகரை அழகுறச் செய்தல், ஒழுங்குப்படுத்துதல், சாலையை மேம்படுத்துதல், நடைபாதையை மேம்படுத்துதல், பூங்கா மேம்பாடு, சுற்றுலா மேம்பாடு ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சாலைகளை ஒழுங்குப்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி சாலைகளில் மையத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.