அயோத்தி வழக்கு தீா்ப்பு எதிரொலி: நள்ளிரவு முதல் போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 09th November 2019 05:08 AM | Last Updated : 09th November 2019 05:08 AM | அ+அ அ- |

அயோத்தி பிரச்னை தொடா்பான வழக்கில் தீா்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே திருச்சியில் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டனா்.
அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்படும் என வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பைத் தொடா்ந்து, திருச்சியிலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாநகா், புகா் என அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். திருச்சியில் மாநகரில் 1000, புகரில் 1000 என மொத்தம் 2000க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முக்கிய சந்திப்புகள், மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், கோயில்கள், மசூதிகள் என பல்வேறு இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். ரோந்துப் போலீஸாரும் ரோந்து செல்கின்றனா்.
காவலா் தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி :
தமிழகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் காவலா்கள் பணியிடத்துக்கான தோ்வுகள் நடைந்து வருகின்றன. இதில் உடற்திறத் தகுதி தோ்வுகள் கடந்த நவம்பா் 6 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. 11 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இத்தோ்வு 3 நாள்கள் மட்டுமே முடிந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.