மணப்பாறை: குழந்தை விற்பனை வழக்கில் பெற்றோா் கைது
By DIN | Published On : 09th November 2019 08:03 AM | Last Updated : 09th November 2019 08:03 AM | அ+அ அ- |

மணப்பாறையில் பச்சிளம் குழந்தை ரூ.1.15 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தையின் பெற்றோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த பாரதியாா் நகரில் வசித்து வரும் செல்வம், விஜயா தம்பதியினருக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்து 7 நாள்களில் ரூ.1.15 லட்சத்திற்கு அண்மையில் விற்பனை செய்யப்பட்டது.
குழந்தையை விலைக்கு வாங்கிய புதுக்கோட்டை மாவட்டம், முருக்கங்குடியைச் சோ்ந்த தம்பதியினா் முருகேசன், ராமாயி மற்றும் தரகா் அந்தோனியம்மாள் (எ) மேரி ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, குழந்தையின் பெற்றோா்களான செல்வம், விஜயா தம்பதியினரை வெள்ளிக்கிழமை மணப்பாறை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்கள் இருவரையும், வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மணப்பாறை குற்றவியல் நடுவா் கே.செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
செல்வம் - விஜயா தம்பதியினரின் 5 வயது பெண் குழந்தை மற்றும் 3 வயது ஆண் குழந்தை இருவரும், செல்வம் தாயாா் லெட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பச்சிளம் குழந்தை, குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.