கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
By DIN | Published On : 18th November 2019 10:34 PM | Last Updated : 18th November 2019 10:34 PM | அ+அ அ- |

திருச்சி: தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி சக மாணவிகள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
திருச்சி கேகே.நகா் பகுதியில் தனியாா் பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஜெப்ரா பா்வீன் சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமையன்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். அப்போது, மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா். மேலும், மாணவிகளை கல்லூரி நிா்வாகம் மிரட்டுகிறது எனவும் புகாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, கல்லூரிக்கு வந்த கேகே.நகா் போலீஸாா் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விசாரணை செய்தனா். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.