"வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்'
By DIN | Published On : 01st September 2019 02:42 AM | Last Updated : 01st September 2019 02:42 AM | அ+அ அ- |

திருட்டுக் குற்றங்களைத் தடுக்கும் வகையில், வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ்.
திருச்சி காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மேலும் அவர் கூறியது:
பொதுமக்கள் யாரேனும் தங்களது செல்லிடப்பேசியை தொலைத்துவிட்டாலோ அல்லது திருடர்களிடம் பரிகொடுத்தாலோ, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு செல்லிடப்பேசி மீட்டுத் தரப்படும். திருச்சி மாநகரில் சுமார் 10,000 கேமராக்கள் உள்ளன. இதில் 1000 கேமராக்கள் மாநகரக் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால், மாநகரில் நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரும் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள், தங்களின் பாதுகாப்புக் கருதி கூடுதலாக ரூ.10 ஆயிரம் செலவிட்டு, வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக, திருச்சி தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் வங்கியிலிருந்து கடந்த 20 ஆம் தேதி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லத் தயாராக வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருடிச் சென்ற பாலக்கரை ஸ்டீபனை, பெரம்பலூரில் பிடித்து கொடுத்த மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவுக்கு(42) மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.மேலும், கடந்த 3 மாதங்களில் மாநகரில் திருட்டுப் போன 35 செல்லிடப்பேசிகளை மீட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமும் ஆணையர் ஒப்படைத்தார். மேலும் சாலையில் கிடந்த சுமார் 15 பவுன் நகைகளுடன் கூடிய பணப்பையை எடுத்து, அதன் உரிமையாளரிடம் வழங்கிய தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சரவணனை, காவல் ஆணையர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில், மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.