முசிறி மங்கள விநாயகர் கோயிலில் குடமுழுக்கு
By DIN | Published On : 02nd September 2019 06:21 AM | Last Updated : 02nd September 2019 06:21 AM | அ+அ அ- |

முசிறி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சுண்ணாம்புக் காரத் தெரு அருள்மிகு மங்கள விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கையொட்டி, சனிக்கிழமை காவிரியாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, யாகசாலைகள் பூஜைகள் நடைபெற்றன.ஞாயிற்றுக்கிழை பூஜைகள், பூர்ணாஹுதி முடிந்த பின்னர், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கோபுர விமானத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூலவர் மங்கள விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குடமுழுக்கை முசிறி எஸ். மாணிக்கசுந்தர சிவாச்சாரியர் குழுவினர் நடத்தினர். ஏராளமானோர் குடமுழுக்கில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.