கோயிலுக்குள் புகுந்து பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 11th September 2019 09:04 AM | Last Updated : 11th September 2019 09:04 AM | அ+அ அ- |

மணப்பாறையில் அருகே கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்களைத் திருடிச் சென்ற மர்மநபரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
மணப்பாறையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வர் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் பூஜை பணிகளை மேற்கொள்ள கோயில் குருக்கள் கண்ணன் வந்தார். அப்போது, கருவறை கதவு, பீரோ ஆகியவை உடைந்திருப்பதும், பொருள்கள் சிதறி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் திங்கள்கிழமை நள்ளிரவு கோயில் மதில் சுவரை ஏறிக்குதித்த மர்ம நபர், கருவறை கதவு, பீரோ ஆகியவற்றை உடைத்து பித்தளை பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.