தனி நபர்கள் சிலர் விலகுவதால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், தொண்டர்களால் தாங்கி நிற்கும் இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என அதன் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த திருச்சியில் செவ்வாய்க்கிழமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்று மேலும் பேசியது:
கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் தரப்பிலிருந்து விடியோ, ஆடியோ வெளியிடப்பட்டிருந்தால் தலைமை மீது புகார் சொல்லலாம். அமமுக-வுக்கு ஆதரவாக பொதுவான இளைஞர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுகின்றனர். இந்நிலையில், புகழேந்தி குறித்த விடியோ வெளியானதை, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றபோது நிர்வாகிகளின் செல்லிடப்பேசிக்கு வந்திருப்பதைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுடன் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருந்த சிலர் அவர்களது தனிப்பட்ட காரணத்துக்காக விலகிச் செல்கின்றனர். அதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. அமமுக என்பது தொண்டர்களாலும், இளைஞர்களாலும் தாங்கி நிற்கும் இயக்கமாகும். யார் பிரிந்து சென்றாலும், நானே விட்டுச் சென்றாலும் இயக்கம் அழியாமல் இருக்கும்.
எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் அந்தஸ்து வேண்டும் என்பதற்காக சிலர் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர்.
சசிகலாவால் அடையாளம் காணப்பட்டு, ஆட்சியையும் பெற்றவர்கள் அவரது கணவர் (நடராஜன்) மறைவுக்கு கூட வரவில்லை. எதிர்க் கட்சியினர் கூட அரசியல் மறந்து வந்தனர். ஆனால், தமிழக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்தான் சசிகலாவுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுகின்றனர். யாரையும் பற்றி கவலையில்லை. ஜெயலிலதாவின் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும். இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியப் பாதையில் பயணித்து வருகிறோம் என்றார்.
இக் கூட்டத்தில், கட்சியின் தலைமை நிலையச் செயலர் ஆர். மனோகரன், அமைப்புச் செயலர் சாருபாலா ஆர். தொண்டைமான், மாவட்டச் செயலர்கள் ஜெ. சீனிவாசன், மா. ராஜசேகரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.