உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd September 2019 03:27 AM | Last Updated : 22nd September 2019 03:27 AM | அ+அ அ- |

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றி அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்க நிகழ்ச்சியில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, சங்க தலைவர் த.பானுமதி தலைமை வகித்தார். பொதுச்செயலர் அங்கயற்கண்ணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் ரா.செந்தாமரை, சங்க துணைத்தலைவர் பெ.தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புப் போராட்டங்களும், பெண் விடுதலைக் கருத்தாக்கங்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினர். பின்பு, இலக்குவனாரின் தமிழ் மறுமலர்ச்சி எனும் நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், மக்களின் மொழியே நீதியின் மொழியாக வேண்டும். உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவேண்டும். குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதற்கு மகளிர் நீதிமன்றங்கள் இருப்பினும், நீதி கிடைப்பதில் அதிக தாமதமாகிறது. எனவே, சமூக அக்கறையுள்ள நீதிபதிகளை விரைந்து நியமித்து பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஜாதி ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றி நீதி அளிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, வழக்குரைஞர் கு.பாரதி நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து, அறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் எனும் பொம்மலாட்ட நாடகத்தை கலைவாணன் பொம்மாலாட்டக் குழுவினர் நடத்தினர். இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G