ஸ்ரீரங்கத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு
By DIN | Published On : 22nd September 2019 03:30 AM | Last Updated : 22nd September 2019 03:30 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசித்தனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபட்டு விரதம் மேற்கொள்வர். இதையொட்டி சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு மூலவர் நம்பெருமாளுக்கு பொங்கல் பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சேவை 6.30-க்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனம் முடித்து பக்தர்கள் வெளியே வரும் தொண்டைமான் கேட் அருகே லட்டு, மஞ்சள், கற்கண்டு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை பூஜா காலம் நடந்தது. அதன் பின் இரவு 6.45 மணிக்குத் தொடங்கி 8.45 மணி வரை பக்தர்கள் சேவை செய்தனர். அதன் பின் நடை சாத்தப்பட்டது. விழாவையொட்டி விஸ்வரூப தரிசனம் இல்லை. இதேபோல, மற்ற 3 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் சேவை கிடையாது. நம்பெருமாள் சேவை நேரம் அதிகரித்ததைப் போல தாயார் சன்னதியிலும் சேவை நேரம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரையிலும் அதன் பின் 5.45 மணி முதல் 6.45 மணி வரை பூஜாகாலம் முடிவுற்ற பிறகு இரவு 7 மணிக்கு தொடங்கி 9 மணி வரை பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், மதியம் 2.30 முதல் 5.30 வரையிலும் இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பக்தர்கள் சேவை செய்தனர். ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
துறையூரில்: துறையூரில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
துறையூர் அருகேயுள்ள பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
அடிவாரத்தில் உள்ள திருமணக்கூடங்களில் பல்வேறு அமைப்பினர் அன்னதானம் செய்தனர்.
இதேபோல பெருமாள்மலை அடிவாரத்தில் இருந்த கோவிந்தராஜ் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில், துறையூர் பாமா ருக்குமணி சமேத ஸ்ரீ வேணுகோபால் கோயில், ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள் கோயில் , திருச்சி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.