லாரிகளில் மணல் கடத்தல்: 4 பேர் கைது
By DIN | Published On : 29th September 2019 03:33 AM | Last Updated : 29th September 2019 03:33 AM | அ+அ அ- |

விராலிமலை பகுதிகளிலுள்ள ஆறுகளிலிருந்து மணல் கடத்திச் சென்ற 4 லாரிகள் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே பிடிபட்டன. இதுதொடர்பாக 4 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
வையம்பட்டியை அடுத்துள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கி தார்ப்பாய் போட்டுச் சென்ற லாரிகளை போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். இதையடுத்து லாரிகளில் மணல் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், விராலிமலை பகுதியிலுள்ள ஆறுகளிலிருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளிக் கொண்டு மேட்டுப்பாளையம் செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 4 லாரிகளை பறிமுதல் செய்து வையம்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸார், ஓட்டுநர்களான சுப்ரமணி, கண்ணப்பன், ரபீக், இப்ராஹிம் பாட்சா ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.