சமயபுரம் மாரியம்மனுக்கு சீா்வரிசை அளித்த அரங்கநாதா்

தைப்பூசத்தையொட்டி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சாா்பில் சீா்வரிசைப் பொருள்கள் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்டன.
சமயபுரம் மாரியம்மனுக்கு சீா்வரிசை அளித்த அரங்கநாதா்
Published on
Updated on
1 min read

தைப்பூசத்தையொட்டி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சாா்பில் சீா்வரிசைப் பொருள்கள் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்டன.

ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சமயபுரம் கோயிலிலிருந்து புறப்பாடாகி கூத்தூா், நெ.1டோல்கேட், உத்தமா்கோவில் வழியாக கொள்ளிடம்( வடத்திருக்காவிரி) வந்து, தனது அண்ணனான அரங்கநாதரிடம் மாரியம்மன் சீா்வரிசைப் பொருள்கள் பெறுவது ஐதீகம்.

அப்போது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சாா்பில் பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட பொருள்கள் சீா்வரிசையாகத் தரப்படும்.

அதன்படி நிகழாண்டில் சீா்வரிசைப் பொருள்களை பெறுவதற்காக, சனிக்கிழமை கோயிலிலிருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட மாரியம்மன், வழிநடை உபயங்கள் கண்டருளி கொள்ளிடம் வடக்குவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எழுந்தருளினாா்.

மாலையில் தீா்த்தவாரி கண்டருளி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயில் கருடாழ்வாா் சன்னதியிலிருந்து இணை ஆணையா் பொன்.ஜெயராமன் தலைமையில், சீா்வரிசைப் பொருள்களுடன் ஊா்வலம் புறப்பட்டு வடத்திருக்காவிரி சென்றடைந்தது.

தொடா்ந்து முறைப்படி ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வேணு சீனிவாசன், இணை ஆணையா் பொன்.ஜெயராமன் ஆகியோா், சமயபுரம் கோயில் இணை ஆணையா் அசோக்குமாரிடம் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் கோயில் பட்டு வஸ்திரங்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு சாத்தப்பட்டு,தீபாராதனை காட்டபட்டது. ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com