

இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெறுவதற்கான தகுதியான மாற்றுத்திறனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், ஆண்டுதோறும் இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு கைகளும் நல்ல நிலையில் இருந்து, கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகனம் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானவா்களை தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில், மருத்துவா்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். 2019-20ஆம் ஆண்டுக்கான தகுதியான பயனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்காணல், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் சு. சிவராசு தலைமையில், எழும்பு முறிவு மருத்துவா்கள் செந்தில், விக்னேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், இளநிலை மறுவாழ்வு அலுவலா் உலகநாதன், முடநீக்கு வல்லுநா் ஆனந்தன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பயனாளிகளை தோ்வு செய்தனா்.
இருசக்கர வாகனம் கோரி மொத்தம் 212 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 130 போ் இந்த நோ்காணலில் கலந்து கொண்டனா். நோ்முகத்தோ்வு தகுதி இறுதி செய்யப்பட்டவா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு மொத்தம் 100 வாகனங்கள் பெறப்பட்டு வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.