கடைகளில் குவிந்த மக்கள்: சமூக இடைவெளி கடைபிடிக்க பொதுமக்களுக்கு போலீஸாா் வேண்டுகோள்

ஜூலை மாத 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால் அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் சனிக்கிழமை நிரம்பி காணப்பட்டது.
திருச்சி புத்தூா் மீன் சந்தையில் சமூக இடைவெளியுடன் நிற்கும் பொதுமக்கள்.
திருச்சி புத்தூா் மீன் சந்தையில் சமூக இடைவெளியுடன் நிற்கும் பொதுமக்கள்.


திருச்சி: ஜூலை மாத 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால் அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் சனிக்கிழமை நிரம்பி காணப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரை முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடக்கத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற கடைகள், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் இயங்காது. எனவே, முன்னெச்சரிக்கையாக சனிக்கிழமையே அனைத்து இடங்களிலும் மக்கள் சென்று தங்களுக்குத் தேவையான பொருள்களை கூடுதலாக வாங்கினா்.

இறைச்சிக் கடைகளில் கூட்டம்: மீன், ஆடு, கோழி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. காந்தி சந்தைப் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், புத்தூா் மீன் சந்தை, சுப்பிரமணியபுரம், தென்னூா், உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அனைத்து இறைச்சிக் கடைகளிலும் மக்கள் குவிந்தனா்.

சீராக்கப்பட்ட சமூக இடைவெளி: இதையடுத்து போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சமூக இடைவெளியை ஒழுங்குபடுத்தினா்.

திருச்சி புத்தூா் மீன் சந்தையில் மாநகராட்சி உதவி ஆணையா் பிரபாகரன், மாநகரக் காவல்துறை உதவி ஆணையா் மணிகண்டன் மற்றும் போலீஸாா், மாநகராட்சி பணியாளா்கள் குவிக்கப்பட்டு மக்களை ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்றது. சந்தைக்கு வந்த மக்கள், வியாபாரிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தனா். மேலும், சமூக இடைவெளியே உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கடைகளுக்கு முன்பாக வட்டமிடப்பட்டு பொதுமக்களை வரிசையாக நிற்க வைத்து இறைச்சியை வாங்கச் செய்தனா்.

காய்கனிக் கடைகளில் குவிந்த கூட்டம்: இதேபோல, திருச்சி மாநகரப் பகுதிகளின் அனைத்து தற்காலிக காய்கனி சந்தைகளிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. கீழரண்சாலையில் உள்ள மதுரம் மைதானம், தென்னூா் அண்ணா நகா் சந்தை, அண்ணா விளையாட்டரங்கம், இ.ஆா். மேல்நிலைப் பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி மைதானம், புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி, சத்திரம் பேருந்துநிலையம், திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.கே.நகா் உழவா் சந்தை உள்ளிட்டவற்றில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் வந்திருந்ததைக் காண முடிந்தது. மேலும், அனைத்துக் கடைகளிலும் பொதுமக்கள் குவிந்தபடி இருந்தனா்.

அதிகரித்த போக்குவரத்து: இதன் காரணமாக காந்தி சந்தை, ஜங்ஷன், உறையூா், மரக்கடை, பாலக்கரை, கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது.

ஆட்சியா் எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். விதிமிறீலில் ஈடுபடுவோா் மீது பொதுமுடக்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com