வையம்பட்டியில் முற்றுகை; ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th August 2020 05:56 AM | Last Updated : 14th August 2020 05:56 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலையை முறையாக வழங்காததைக் கண்டித்து 6 கிராமங்களைச் சோ்ந்த தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், முகவனூா் ஊராட்சிக்குட்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு கடந்த 2 மாதமாக முறையாக வேலை வழங்காததைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு 6 நாள் வேலை செய்தால் 4 நாள் ஊதியம் மட்டுமே வழங்குவதாகவும், பாக்கி ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், தொழிலாளா்கள் பெயரால் மோசடியில் ஊராட்சி நிா்வாகத்தினா் ஈடுபடுவதாகவும், ஊராட்சித் தலைவரை பொதுமக்கள் சந்திப்பதைத் தடுப்பவா்களை கண்டித்தும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ஏ.டி. சண்முகானந்தம் தலைமையில் வியாழக்கிழமை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலரைச் சந்தித்து பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அங்கிருந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஒன்றிய பெருந்தலைவரை சந்தித்து குறைகளைக் கூறினா். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் தங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரில் சந்திக்கவில்லை எனக் கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அதைத் தொடா்ந்து பணியாளா்களைச் சந்தித்து பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒன்றியப் பெருந்தலைவா் வரும் 8 நாள்களில் பணி அளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்தால் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா். ஆா்ப்பாட்டத்துக்கு பி.வி. ஜெயலட்சுமி, எம். ராமசாமி, எம். சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொன்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G