விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல்: திருச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் 88 போ் கைது
By DIN | Published On : 01st December 2020 02:26 AM | Last Updated : 01st December 2020 02:26 AM | அ+அ அ- |

புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 88 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தில்லி செல்வோம் என்ற போராட்டத்தை பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த 5 நாள்களாக போராட்டத்தை தில்லியிலும், எல்லைப் பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனா். இந்த போராட்டத்தில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளும் தற்போது இணைந்துள்ளனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், திருச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ராஜா தலைமையில் கட்சியினா் ரயில்வே ஜங்ஷனுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்த முயன்றனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரயில் நிலையத்துக்குள் தங்களை அனுமதிக்காததால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா். இந்நிலையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜனசதாப்தி ரயில் முன்பு அமா்ந்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 88 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...