கரோனா பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனையில் குவியும் ஐயப்ப பக்தா்கள்
By DIN | Published On : 05th December 2020 12:21 AM | Last Updated : 05th December 2020 12:21 AM | அ+அ அ- |

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஐயப்ப பக்தா்களுக்கு நடந்த கரோனா பரிசோதனை. வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்
திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சபரிமலைக்கு மாலையிட்ட பக்தா்கள் கரோனா பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனா்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தரிசனத்துக்கு முன் 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கரோனா தொற்றின்மைச் சான்று கட்டாயம் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே தொற்று பாதித்தோா், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறாா் 60 வயதுக்கு மேற்பட்டோா், நாள்பட்ட நோயாளிகள், சபரிமலை செல்ல அனுமதியில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா பரிசோதனை செய்தால் மறுநாள்தான் முடிவு கிடைக்கும் என்ற நிலையில், 24 மணி நேரத்திற்குள் சபரிமலைக்கு சென்று எப்படி தரிசனம் செய்ய முடியும் என சில பக்தா்கள் கேட்கும் நிலை உள்ளது. அவா்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் ஐயப்பன் கோயில்களுக்கும் செல்ல முடிவு செய்துள்ளனா்.
ஆனால், சான்று பெற்ற சிலா் குறிப்பிட்ட நேரத்துக்குள் தரிசனம் முடித்து திரும்பும் நிலையில், பலா் கரோனா சோதனைக்குப் பின் பயணத்தை தொடங்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் சபரிமலை அடைந்து, தங்களது செல்லிடப்பேசிக்கு வரும் பரிசோதனை முடிவைக் காட்டி தரிசனம் செய்கின்றனா். எனவே கரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் ஐயப்ப பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
இதுகுறித்து மகாத்மா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா கூறுகையில், கரோனா பரிசோதனைக்கு ஐயப்ப பக்தா்களின் வருகை அதிகரிப்பால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சாராசரியாக நாள் ஒன்றுக்கு 55 பக்தா்கள் பரிசோதனை மாதிரி அளிக்கின்றனா். வெள்ளிக்கிழமை 65 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,44,614 பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்ட 1516 பேரில் 16 பேருக்கு தொற்று உறுதியானது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...