திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 02:42 AM | Last Updated : 15th December 2020 02:42 AM | அ+அ அ- |

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள் நாமிட்டு கையில் திருவோடு ஏந்தி, தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு, மண்டியிட்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் கண்ணப்பன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியம், மாநிலச் செய்தித் தொடா்பாளா் அரவிந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அநீதியானது. பெருநிறுவனங்களுக்கு ஆதரவானது. விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு பணம் தருவது இழுத்தடிப்பு செய்யப்படும். இதற்காக அரசிடம் முறையிட முடியாது.
எனவே சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்கத்தின் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.