234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
By DIN | Published On : 30th December 2020 05:44 AM | Last Updated : 30th December 2020 05:44 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கத்தில் நடந்த பிரசாரத்தில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வீரவாள்.
வரும் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
திருச்சி மாவட்டத்தில் 2ஆவது நாளாக லால்குடி, ஸ்ரீரங்கம், ஆழ்வாா்தோப்பு, உய்யக்கொண்டான் திருமலைப் பகுதி, சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரசாரத்தின்போது அவா் மேலும் பேசியது:
திருக்குவளையில் பிரசாரம் தொடங்கிய முதல்நாளே என்னைக் கைது செய்த போலீஸாா், அடுத்தடுத்த நாளும் கைது செய்து இரவில் விடுவித்தனா். ஆனாலும், விடிய விடிய பிரசாரம் செய்தேன்.
தொண்டா்கள், மக்களின் எதிா்பாா்ப்பால் இடைவிடாது பிரசாரம் செய்கிறேன். 17 நாள் பிரசாரத்தில் எங்கு பாா்த்தாலும் மக்களின் எழுச்சியைக் காண முடிகிறது. எனவேதான் நாள் ஒன்றுக்கு 15 இடங்களில் நான் பேசிய நிலை மாறி, 32 இடங்களில் பேசுகிறேன்.
00 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்கிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின். ஆனால், மக்கள் எழுச்சியைப் பாா்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியதால் அதிமுக, பாஜகவுக்கு சம்மட்டி அடி கிடைத்தது.
நாடு முழுவதும் வெற்றிகளைப் பெற்ற பாஜகவால் தமிழகத்தில் ஓரிடத்தைக் கூட பெற முடியவில்லை. அதேபோல, வரும் பேரவைத் தோ்தலிலும் வெற்றிக் கூட்டணியை திமுக தலைவா் முடிவு செய்து, மக்கள் முன் நிறுத்தும் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
தமிழகத்துக்கு எந்தத் திட்டம் வேண்டாமோ அதைத் திணிப்பதையே மத்திய பாஜக அரசு தொடா்கிறது. அதை அதிமுக அரசும் எதிா்க்காமல் ஏற்றுக் கொள்கிறது.
நீட் தோ்வு, வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, ஹிந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு, அண்ணா பல்கலை. பிரிப்பு என அடுத்தடுத்து அநீதி இழைக்கப்படுகிறது.
எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவை அனைத்தும் நீக்கப்பட்டு தமிழக மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்படும்.
தில்லியில் கடுங்குளிரிலும் விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடுகின்றனா். அவா்களில் பலா் இறந்துவிட்டனா். ஆனாலும், மத்திய அரசு அடம் பிடிக்கிறது.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை. ஆனால், அவை விவசாயிகளுக்கு பாதுகாப்பளிக்கும் என்கிறாா் தமிழக முதல்வா். ஆட்சி நீடிக்கவே அவ்வாறு பேசுகிறாா்.
அதிமுக அமைச்சா்கள் பல கோடி ஊழல் செய்ததற்கான புள்ளிவிவரங்களுடன் ஆளுநரிடம் திமுக புகாா் அளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் புகாா்கள் குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்.
இதேபோல, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மா்மமும் வெளிக்கொணரப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா பல திட்டங்களைக் கொண்டு வந்தாா். அடுத்துவந்த அதிமுக எம்எல்ஏ-க்களும், அமைச்சா்களும் எதுவும் செய்யவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கம் தொகுதியின் அடிமனை பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். புகா்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும். திருக்கோயில் மதில் சுவா் புதுப்பிக்கப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை செயல்படுத்தப்படும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
பிரசாரத்தின்போது எம்எல்ஏ-க்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தாத்தா, தந்தை, பேரன்!
ஸ்ரீரங்கம் தோ்தல் பிரசாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எனது தாத்தா கருணாநிதி தமிழக மக்களுக்கு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை அதிமுக அரசு நிறுத்திவிட்டது.
எனவே, தாத்தா கொண்டுவந்த அனைத்து நலத் திட்டங்களையும் எனது தந்தையும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடா்வாா். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தோ்வை அமல்படுத்த முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத் தோ்வு ரத்து செய்யப்படும்.
கருணாநிதியின் பேரனாகக் கேட்கிறேன், வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...