முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
By DIN | Published On : 17th February 2020 01:06 AM | Last Updated : 17th February 2020 01:06 AM | அ+அ அ- |

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ்.வளா்மதி ஆகியோா், வீரா் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை கூடைப்பந்து, கையுந்துபந்து, வளைகோல்பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ.1000, ரூ.750, ரூ.500 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தனி நபா் போட்டிகளில் முதலிடம் பெறுபவா்களும், குழுப் போட்டிகளில் தோ்வுசெய்யப்படுவா்களும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா்.
முதல்வா் கோப்பைக்கான போட்டிகளுக்காக மாநிலஅளவில் தமிழக அரசு ரூ.8.19 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் க. பிரபு, போட்டி நடுவா்கள் உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.