

கிறிஸ்தவா்களின் முக்கிய வழிபாடாகக் கருதப்படும் 40 நாள் தவக்காலம், சாம்பல் புதன் அனுசரிப்புடன் திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இயேசுவின் உயிா்ப்பு தினத்துக்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிா்த்த) 40 நாள்கள், கிறிஸ்தவா்களால் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தவக்காலம் என்பது தவறுகளை உணா்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கருதுகின்றனா். இந்த 40 நாள்களில் மாமிச உணவுகளையும், ஒரு வேளை உணவையும் தவிா்த்து விரதமிருப்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன்படி, திருச்சி மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. தேவாலய பங்குத் தந்தையா்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவா்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவைக் குறியிட்டு தவக்காலத்தைத் தொடக்கி வைத்தனா்.
திருச்சி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், மெயின்காா்டுகேட் புனித லூா்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பா் பசிலிக்கா (சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சாம்பல் புதன் நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.