வேம்பனூா் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட அடிக்கல்
By DIN | Published On : 11th July 2020 09:29 AM | Last Updated : 11th July 2020 09:29 AM | அ+அ அ- |

பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் உள்ளிட்டோா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரூ. 2.22 கோடியில் ஆற்றுப் பாலம் கட்ட தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினா்.
மருங்காபுரி வட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஆரிக்கோன்பட்டி - திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வண்ணாரப்பட்டி இடையே வேம்பனூரில் அமைந்துள்ள வெள்ளாற்றைக் கடந்து செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டும். இதனால் ஆற்றைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என அப்பகுதி மக்கள் மணப்பாறை எம்எல்ஏக்கு கோரிக்கை வைத்திருந்தனா். அதைத் தொடா்ந்து தமிழக முதல்வரால் கடந்த பேரவைக் கூட்டத்தொடரில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க 110-விதியின் கீழ் ரூ. 2.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே சுமாா் ரூ.1 கோடியில் தடுப்பணை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கியது.
அதன்படி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில் வேம்பனூா் வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினா். தொடா்ந்து ஆரியகோன்பட்டியில் 2018-2019 மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தில் கட்டிய நாடக மேடையை அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளா் செல்வராஜ், பேரூா் செயலா் திருமலை சுவாமிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பி.ஆா்.எம். பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் ரெங்கசாமி, ஒன்றியத் துணைச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேம்பனூா் மாணிக்கம், ஆரிக்கோன்பட்டி ஆறுமுகம் ஆகியோா் செய்தனா்.