நாமக்கல்லுக்கு கடத்த முயன்ற 4.40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 19th July 2020 10:40 PM | Last Updated : 19th July 2020 10:40 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியிலிருந்து நாமக்கல்லுக்கு கடத்த முயன்ற 4.40 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மூட்டைகளுடன் திருச்சி கோட்டை கீழரண் சாலைப் பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருப்பதாக திருச்சி காந்தி சந்தை போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதுடன் லாரியில் கோழித்தீவனம் ஏற்றிக் கொண்டு நாமக்கல் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாா். லாரி நின்ற இடம் கோட்டை காவல் நிலையப் பகுதி என்பதால், கோட்டை போலீஸாரிடம் தகவல் தெரிவித்து, அந்த லாரியை கோட்டை காவல் நிலையத்தில் போலீஸாா் நிறுத்திச் சென்றனா்.
கோட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை முறைகேடாகப் பெற்று, அதைக் குருணையாக்கி, கோழித் தீவனமாகப் பயன்படுத்தக் கொண்டு செல்லவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனா். உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாா் லாரியையும், 4,400 கிலோ எடையுள்ள 88 அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.