குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது
By DIN | Published On : 01st March 2020 10:44 PM | Last Updated : 01st March 2020 10:44 PM | அ+அ அ- |

திருச்சியில் நகைபறிப்பு வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருவெறும்பூா் காட்டூா் விண் நகரைச் சோ்ந்த சேதுராமன் மனைவி பத்மாவதி (60). கடந்த ஜனவரி மாதம் 31- ஆம் தேதி தனது பேத்தியை பள்ளியில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
பிரதான சாலையில் வந்த போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பத்மாவதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, கொட்டப்பட்டு இந்திராநகா் பாண்டி என்கிற புறா பாண்டி (29), சுப்பிரமணியபுரம் கோனாா் தெரு மணிகண்டன் என்கிற பாட்டில்மணி (24) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா்கள் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் பரிந்துரைத்தாா்.
இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா். தொடா்ந்து சிறையில் உள்ள இருவரிடமும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, காவல்துறையினா் சனிக்கிழமை வழங்கினா்.