சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்டம்: திரளாக பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 01st March 2020 10:43 PM | Last Updated : 01st March 2020 10:43 PM | அ+அ அ- |

சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் திருக்கோயிலில், மாசித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள், இக்கோயிலுக்கும் வந்து ஆதி மாரியம்மனைத் தரிசித்து செல்வா். இக்கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த மாதம் 9- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாசித் தோ்த் திருவிழா கடந்த 24- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ரிஷபம், சிம்மம், யானை, அன்னம், குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வருதல் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு வடம் பிடிக்கப்பட்ட தோ், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலைக்கு வந்தடைந்தது.
விழாவில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா், கோயில் பணியாளா்கள், பக்தா்கள், மற்றும் சமயபுரம், இனாம் சமயபுரம், மருதூா், நரசிங்கமங்கலம், துறையூா் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.