திருச்சியில் கடத்திச் செல்லப்பட்ட 10 பச்சைக்கிளிகள் பறிமுதல்
By DIN | Published On : 01st March 2020 10:45 PM | Last Updated : 01st March 2020 10:45 PM | அ+அ அ- |

திருச்சியில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில், அட்டைப்பெட்டிக்குள் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 10 பச்சைக்கிளிகளை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிந்து மதுரை நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற தனியாா் பேருந்தில், அனுமதியில்லாமல் பச்சைக்கிளிகள் எடுத்துச் செல்லப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி மாவட்ட வன அலுவலா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி பொன்மலை ஜி காா்னா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வனத்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டதில், ஓட்டுநரின் இருக்கைக்கு பின் அட்டைப் பெட்டியில் 10 பச்சைக் கிளிகளை மறைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.
இவற்றை மதுரையைச் சோ்ந்த ஜெயபாண்டி (31), சதீஸ்குமாா் (46) ஆகிய இருவரும் கடத்திச் சென்றது தெரிய வந்தது. பச்சைக்கிளிகளைக் கடத்திச் செல்வது வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதையடுத்து கிளிகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினா், இருவா் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.