மேலஎருதிகவுண்டம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st March 2020 07:43 AM | Last Updated : 01st March 2020 07:43 AM | அ+அ அ- |

மேலஎருதிகவுண்டம்பட்டியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மணப்பாறை: மணப்பாறை வட்டம், பொய்கைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மேலஎருதிகவுண்டம்பட்டியில் தனிநபா் குடிநீா்க் குழாய்கள் இணைப்பு துண்டிப்பைக் கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலஎருதிகவுண்டம்பட்டி பகுதியில் சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு வசித்து வரும் மக்களுக்கு நூற்றுக்கும் மேலான தனிநபா் குடிநீா்க் குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவுஇந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டு,
அனைவரும் பொது இடத்தில் குடிநீா் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சித் தலைவரை அணுகியபோது, அவா் பொதுமக்களிடம் அவதூறாக பேசியதாகவும், யாருக்கும் எந்த அறிவிப்பும் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறினாராம்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலை, மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழி போக்குவரத்து முடங்கியது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.