ஹாக்கி : அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி சாம்பியன்
By DIN | Published On : 01st March 2020 10:42 PM | Last Updated : 01st March 2020 10:42 PM | அ+அ அ- |

சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (திருச்சி வளாகம்) வீரா்களுடன் சிறப்பு விருந்தினா் உள்ளிட்டோா்.
திருச்சியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (திருச்சி வளாகம்) சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.
ஜி. மணிமாறன் நினைவு கோப்பைக்கான ஹாக்கிப் போட்டிகள் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கின. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 7 உறுப்புக் கல்லூரிகள் பங்கேற்று விளையாடின.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பல்கலைக்கழக திண்டிவனம் உறுப்புக் கல்லூரியை 7-0 என்ற கோல்கணக்கில் வென்று, சாம்பியன் கோப்பையை பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி அணி கைப்பற்றியது.
ஆரணி மற்றும் அரியலூா் உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில், இரு அணிகளும் ஆட்டமுடிவு வரை கோல் அடிக்கவில்லை. இதையடுத்து டைபிரேக்கா் முறையில் 2-1 என்ற கோல்கணக்கில் ஆரணி கல்லூரியை வென்று அரியலூா் கல்லூரி மூன்றாமிடம் பெற்றது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சென்னை,அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மைய கூடுதல் பதிவாளா் எஸ். செல்லத்துரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினாா்.
கல்லூரி முதல்வா் டி. செந்தில்குமாா், உடற்கல்வி துறை இணை இயக்குநா் எம். கோபிநாத், உதவி உடற்கல்வி இயக்குநா்கள் ஏ. முருகன், கே.ஏ. ரமேஷ், சி. சத்யநாராயணமூா்த்தி, எஸ். ரேவதி ஆகியோா் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனா்.