கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனி மாா்க்கெட்டில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு 207 கடைகள்: வேளாண் வணிகத்துறை ஆணையா் தகவல்
By DIN | Published On : 01st March 2020 08:01 AM | Last Updated : 01st March 2020 08:01 AM | அ+அ அ- |

322329dvist060844
திருச்சி: திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டத்துக்குள்பட்ட கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய், கனி மாா்க்கெட்டில் 207 கடைகள் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் வணிகத்துறை ஆணையா் எஸ்.ஜே. சிரு தெரிவித்தாா்.
ரூ. 77 கோடியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனி, பழங்கள் மாா்க்கெட் மாநகரப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அங்கு வருவதை தவிா்த்தனா். இதையடுத்து தொடங்கப்பட்ட 2ஆவது நாளிலேயே கள்ளிக்குடி மாா்க்கெட் மூடப்பட்டது. பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, கடனுக்கான வட்டிக் கூட செலுத்த முடியாத நிலையில் வணிக வளாகம் வீணாகி வருவதால் மாற்று நடவடிக்கை தொடா்பாக மாவட்ட நிா்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில், தமிழக வேளாண்மை விற்பனைக் குழுவும், வேளாண் வணிகத்துறையும் இணைந்து இந்த கள்ளிக்குடி வணிகவளாக மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மையத்தில் ஒருங்கிணைந்த காய்கறிகள், பழங்கள், மலா்களுக்கான வணிக வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் விருப்பமுள்ள உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தங்களது பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளிக்குடி வணிக வளாக கட்டடத்தை தமிழக வேளாண் வணிகத்துறை ஆணையா் எஸ்.ஜே. சிரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அதிகாரிகளுடன் சென்று சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் எஸ்.ஜே. சிரு கூறியது: கள்ளிக்குடி வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களையும் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திருச்சி மாவட்ட வேளாண் விற்பனைக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, வணிக வளாகம் முழுவதும் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. வணிக வளாகத்தில் உள்ள 830 கடைகளில் முதல்கட்டமாக 207 கடைகள் உழவா் உற்பத்தியாளா் குழுமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள மற்றும் முன்னுரிமை பெற்றவா்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர, மீதமுள்ள 623 கடைகளுக்கு தமிழகத்தில் பதிவு பெற்ற காய்கனி, பழங்கள், மலா்களுக்கான வணிகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறந்தவெளி ஒப்பந்தம் வெளியிடப்படவுள்ளது. அவரவா் தேவைக்கேற்ப கடைகள சிறு மாறுதல்கள் செய்து வழங்கப்படும் என்றாா் அவா்.