கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவையொட்டி திருச்சி காந்திசந்தையில் காய்கனிகளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
திருச்சி காந்தி சந்தையில், கிராமங்களில் இருந்து காய்கனிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இயற்கை பேரிடா் மற்றும் பண்டிகை, சுப நிகழ்ச்சி காலங்களில் வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயா்வு அதிகரிப்பது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களின் வாங்கும் தேவை அதிகரித்து அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானவா்கள் அடுத்து வரும் திங்கள்கிழமை வரையிலான நாள்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வந்தனா். இதனால் பொருள்களின் விலையை வியாபாரிகள் உயா்த்தி விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்து வந்தது. விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவிட்டும் பெரும்பாலான இடங்களில் கடைபிடிக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி காந்திசந்தையில் சனிக்கிழமை அதிகாலை முதல் காய்கள், பழங்கள் வாங்கும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. காய்கனிகளின் வரத்து மற்ற நாள்களை காட்டிலும் அதிகரித்திருந்த போதிலும், வெள்ளிக்கிழமை விற்ற விலையைக் காட்டிலும் சனிக்கிழமை இரு மடங்கு அதிகரித்திருந்தது. ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையும், தக்காளி ரூ. 10 லிருந்து ரூ.20க்கும், பீட்ரூட் ரூ.10 லிருந்து ரூ.25க்கும், முள்ளங்கி ரூ.15 லிருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பழங்களின் விலை சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.